அவள் அவளாய் இருக்கிறாளா?

நான்,
நானாய் இருப்பது
அவளிடம் மட்டும்;

மிருகமாய் பல நேரம்
மிருதுவாய் சில நேரம்!

அவள்,
அவளைத் தொலைக்கிறாள்;
நான்,
அதைப் பார்க்கிறேன்;
அவள் கண்களில்,
நாணத்தை பார்க்கிறேன்;


அவள்,
'அவளை' தொலைத்து
என் 'நானை' காப்பாற்றுகிறாள்!


ஆனாலும்,
அவள் அவளாய் இருக்கிறாளா?


- பொன்னியின் செல்வன் -

பிரிந்த காதல்

எந்தை இறந்தது ஈழத்தில்;
நுந்தை இறந்தது ஈழத்தில்;
நம் காதல் பிரிந்தது  ஈழத்தில்!


இப்போதும்
தினமும் உன்னை
நினைத்து கொள்கிறேன்;


கனடாவில் இருந்து கொண்டு
ஜெர்மனியில் இருக்கும் உன்னை !

துப்பு கெட்ட அரசியல் வாதி

வாய்ப்பை விட்டு விட்டு
இப்போது வாலை துழாவவும்
யாரும் இன்றி !

ஈழ அமைதிக்கு
வாய்ப்புகள் வாய்த்தபோது
வாக்குகளை மட்டும் பார்த்துவிட்டு
வஞ்சித்து விட்டார்கள் !

அடுத்த தேர்தலில்
வால் நுனியை
மீண்டும் பிடித்து விடுவார்கள்
துப்பு கெட்ட அரசியல் வாதிகள் !

மரியாதை நிமித்தமோ

புத்தமும் யுத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.

சத்தமும் ரத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.

ராவனனுக்கும் ராஜபக்ஷேக்கும்
இடம் ?
லங்கா.

பிறகு ஏன்
பெயர் மட்டும்
ஸ்ரீ லங்கா ?
மரியாதை நிமித்தமோ !!

மௌனமாய் அழுகிறோம்

காந்தி தேசத்தில்
கோர ‘கோட்சே’ ;
புத்தர் தேசத்தில்
ராஜ  பக்க்ஷே !

இனம் இரையாகிறது
அதைப் பார்த்து
ஒன்றும் செய்யமுடியாமல்
மனம் கறையாகிறது !!

காடுகளில் பயிற்சி
கவளவாய் சோறு ;
கண்களில் வெறி
மாய்ந்தே போனாலும்
மானமே பெரிது ;
மண்னே மானமென
வாழ்ந்த வீரர்கள் ;
கொன்று குவிக்கப்பட்டு
கிடத்தப் படுகிறார்கள்
புத்தர் காலடியில் !!

மௌனமாய் அழுகிறார்கள்
தமிழக மக்கள்
எதிர்த்து பேசினால்
இந்திய இறையான்மை
எதிர்க்கப் படுமாம் !

உயிரற்ற இறையான்மை
சாகக் கூடாதாம்;
உயிருள்ள இனம்
செத்து போகலாமாம்
கேட்பது யாரிங்கு ?
மௌனமாய் அழுகிறோம் !

புது வருடம் !!!


சென்ற வருடம்
வந்த சோகம்
வரும் வருடத்தில்
வெந்து போகட்டும் !!


சென்ற வருடம்
தந்த சந்தோஷம்
வரும் வருடத்திலும்
வருடட்டும் !!


தூரத்தில் தான் இருக்கிறோம்
ஆன போதிலும்
காண வேண்டும் என்ற
தாகத்தில் தான் இருக்கிறோம் !!!


கனவுகள் நிறைவேற
அறிவை ஆயுதமாக்கி
முயற்சியை பயிற்சியாக்கி
கரங்கள் கடுமையாய் உழைக்கட்டும் !!!


புது வருடம்
புத்துணர்ச்சி வருடமாய்
பொங்கட்டும் !!

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்
எதிரெதிர் வினை;


நீர் - தண்மை
நெருப்பு - வெம்மை


நீர் 
வானில் தோன்றும்
மண் நோக்கி;
நெருப்பு 
மண்ணில் தோன்றும்
வான் நோக்கி;


நீர் தோன்றும் முன் 
மேகம் கருப்பு;
நெருப்பு தோன்றிய பின் 
நிலம் கருப்பு


செந்தழல் திரிந்துபோய் 
தரையிலிருந்து கதகதப்பூட்டும்;
கார்மேகம் கரைந்துபோய் 
தரையிரங்கி குளிரூட்டும்;


காதல் - நீர்
காமமோ - நெருப்பு


காதல் - குளிரும்
காமம் - சுடும்


நெருப்பை அனைக்க நீர்
காமத்தை அனைக்க காதல்


நீரின்றி நாமில்லை
காதலின்றி வாழ்தலில்லை !

பணிவு

பணிவில்லா பிள்ளை
கனிவில்லா கிள்ளை


பணிவே 
பயிற்சியில் முதற்படி;


பணிவாய் நடத்தல் வேண்டும்
பெயர் சொல்லும்படி;


பனத்தை கண்ட பணிவு 
பாதாளம்;
மனத்தை கண்ட பணிவு 
மதிப்பாகும்;


பெற்றோரிடம் பணிவு 
பிள்ளைக்கு அழகு;
ஆசானிடம் பணிவு 
சிஷ்யனுக்கு அழகு;
ஆண்டவனிடம் பணிவு 
பக்தனுக்கு அழகு;
ஆம்படையானிடம் பணிவு 
மனைவிக்கு அழகு;
முதலாளியிடம் பணிவு 
தொழிலாளிக்கு அழகு;


மனதில் பயந்திருப்பதால் இருப்பதில்லை பணிவாய்
மனதில் துனிந்திருப்பதால் இருக்கிறோம் பணிவாய்
மனதால் கனிந்திருப்பதால் இருக்கிறோம் பணிவாய் !

சுனாமி

மீண்டுமா …………..?


தாயே
உன்னை தலைவணங்குகிறோம்
நீ தலை தூக்காதே


கோபமா ….. ?
யார் மீது … ?
எம்மக்கள் மீதா .. ?
எம்மண்ணின் மீதா … ?


உம் முந்தைய கோபத்தின்
மீந்துபோன எச்சமே நாங்கள்


கடலில் அஸ்தி கரைக்க கடமைப்பட்ட
எங்களுக்கு
கடலில் உடலை கரைக்க வைக்காதே


நன்றி என்பது குன்றிப் போனதால்
உள்ளே இழுத்து உயிரை எடுத்து
உப்பு சேர்க்கிறாயா?
வாய்க்கு வெளியே துப்பாதே
வயிற்றுக்குள்ளேயே விழுங்கி விடு

காற்று

காற்றை உண்ண கூலி கேட்கும்
காலம் வராமல் பார்த்து கொள்வோம்
காற்றைத் தடுக்க வேலி போடும்
காலம் வராமல் பார்த்துக் கொள்வோம்

உடலில் குருதியை சுத்தப்படுத்தும்
உயிரை உள்ளே இருத்திவைக்கும்

காற்றில் நாம் மாசை புகுத்துகிறோம்
காற்றோ நம்முள் மாசை அகற்றுகிறது

இதுதான் அவர் நான நன்னயம் செய்து விடலோ

நேற்று
நாம் தோன்றும் முன்னரே தோன்றியது

நாளை
நாம் மறைந்தாலும் காற்று மறையாது

ஆசிரியர்

ஆசிரியம்
தொழில் அல்ல தர்மம்


தவறிப்போய் தவறுசெய்தால்
தனிமையில் தண்டிப்பார்
பொதுவினில் மன்னிப்பார்


நல்லாசிரியனுக்கு இலக்கணம்
மாணவ மணியின் மகிழ்ச்சி


பெற்றோரின் பாராட்டு


அன்பையும் அறிவையும்
பண்பையும் பனிவையும்
செவ்வனே கலந்து
செம்மையாய் புகட்டுவார்


குரு நிந்தனை நரகம்
குரு வந்தனம் மோட்சம்


தாய் நமக்கு உறவு புகட்ட
தந்தையை காட்டுகிறார்


தந்தை நமக்கு அறிவு புகட்ட
குருவைக் காட்டுகிறார்


குரு நமக்கு தெளிவு புகட்டி
நம்மையே காட்டுகிறார்


திரியில்லாமல் தீபம் ஏது ?
மாணவர் வாழ்வில் தீபம் ஏற்ற
ஆசிரியரே திரி ஆவார்


தீபம் ஒவ்வொண்றும்
ஒவ்வொருவிதம்
திரி இறுதிவரையில் திரியாமலே


ஆசிரியருக்கு மகிழ்ச்சி
மாணவன் பள்ளியில் போடும் சலாம் அல்ல
பள்ளியை விட்டு விலகியபின்னும் செலுத்தும் வணக்கம்
பணியில் அமர்ந்தபின்னும் தொடரும் தொடர்பு !


நிஜ ஆசிரியர்
பானையில் வன்னம் வரையமாட்டார்
களிமன்னை பானை ஆக்குவார் !!

பிரிவு

பிரிவிலே பரிவு தெரியும்


பிரிவு என்ற பாதையில்
விரும்பியா நாம் போகிறோம்


பிரிவில்
நாம் புகுத்தப்படுகிறோம்


பிரிதல் காதலில் சாதல்
பின்
சேர்தல் என்பது சொர்க்கம்


பிரிவில் பொத்திவைத்த பாசத்தை
சேர்கையில் பெருக்கிப் பார்க்கலாம் !

இசை

இசை இன்பம்

இசை
காற்றில் வரும்
காதில் விழும்
இன்பம் தரும்

ஒழுங்கற்ற ஓசை இரைச்சல்
ஒழுங்குபடுத்திய ஓசையே இசை

இரைச்சல் இதயத்தை நெருடும்
இசை இதயத்தை வருடும்

இசை
கனத்த மனத்தை
கால்தூசி ஆக்கும்

செந்நிற மனதை
வெந்நிறம் ஆக்கும்

குழந்தையின் மழலையும் இசை
காதலியின் சினுங்கலும் இசை
கட்டிலில் முனகலும் இசை

குதூகலத்தில்
குழுவினில் கூத்தாட வைக்கும்
துயரத்தில்
தனிமையிலும் தாளம் போட வைக்கும்

இசைக்கு இசையாதோர் யாரோ !

வாழ்க்கை

வாழ்க்கையை விளக்க வார்த்தையா
வாழ்க்கை என்ன வாக்கியமா
வளைத்து நிறுத்த !


வாழ்க்கையை கற்க
கலாசாலை இல்லை


வாழ்க்கையில்
தோல்வியும் துரத்திடும்
வெற்றியும் வரும்


தீமையும் தொடரும்
நன்மையும் நடக்கும்


கசப்பும் கலந்திருக்கும்
இனிப்பும் இருக்கும்


காமமும் கொண்டிருக்கும்
காதலும் கண்ணடிக்கும்


வாழ்க்கை
வானவில்லாய் வண்ணமயமாயும் இருக்கும்
நிலவில்லா நாளாய் கரியிட்டும் இருக்கும்


மறந்து போய் பேச்சை நிறுத்தினால்
முடிந்திடும் வார்த்தை
மறந்து போய் மூச்சை நிறுத்தினால்
முற்றிடும் வாழ்க்கை


வாழ்க்கையை வாழ
வாழ்ந்தோர் வார்த்தைகள்
வழிநடத்த வேண்டும்
வழுக்கி விழுந்தோர் வார்த்தைகள்
வெளிச்சமிட வேண்டும்


வாழ்க்கை என்பது
வசதி அல்ல
நிம்மதி !
வாழ்க்கை என்பது
நேற்றும் இன்றும்
இப்பொழுதும் மட்டுமே..


நாளை என்பது
வாழ்க்கையா என்றால்
அதை நாமறியோம்


நாளைய பொழுதை மறந்து
இப்போதைய கணத்தை நினை


வாழ்க்கை ஒரு வரம்
வரம் ஒருமுறையே வரும் !

நட்பு

நட்பென்பது நம்பிக்கை
நட்பை நெஞ்சம் கலந்து நம்பு


கறுப்பு வெள்ளை
நெட்டை குட்டை
மணமக்களுக்கு ஒவ்வாமை
நட்புக்கோ இவை அறியாமை !
நம்பியும் சிலநேரம்
கைவிடலாம் உறவினர்
நம்பாமலே பலநேரம்
கைகொடுக்கும் நல்நட்பு


நட்பில் வாக்கு தவறினும்
நெஞ்சம் நன்மை தவறாது


நட்புக்கு இலக்கணம் எழுத
நட்பு இலக்கியத்தை சார்ந்ததல்ல
இதயத்தை சார்ந்த்தது !

தூக்கம்

வெளிமனம் மூட
உள்மனம் விழிக்க
தொடங்கிடும் தூக்கம்


தூக்கம்
சிலருக்கோ சொர்க்கம்
பலருக்கோ ஏக்கம்


நினைத்த நேரத்தில்
வந்தால் வரம்


நினையாத நேரத்தில்
அழையாத போழ்தும்
வத்தால் சாபம்


மாத்திரை விழுங்கி
நித்திரை வாங்குவார்
கோடிகள் சேர்த்தார்


நிலாவைப் பார்த்ததும்
நிம்மதியாய் உறங்குவார்
தெருக்கோடியை சேர்ந்தோர்

திருமணம்

திருமணம் ஒரு அங்கீகாரம்
திருமணம் என்பது
மூன்றுமுடிச்சு ஏறுகின்ற
நீட்டிக்கப்பட்ட அந்த ஒரு நொடி


இருமனம் இனைந்து
நீட்டிக்கப்படுகின்ற அந்த ஒருகணம்


திருமணம் ஒரு
புணர்ச்சி விதி
வாழத் தெரியாதவர்க்கோ
அதுவொரு சதி

சம்பளம்

மூளை மூலதனத்தில்
உடல் உழைப்பில் வரும்
முதல் சம்பளம்
உள்ளம் உள்ளவரையும்
அறிவு அழியும்வரையும்
அப்படியே இருக்கும்


முதல் சம்பளத்தில்
வாங்கி வைத்திட்ட
முதல் பொருள்
மூச்சுமுட்டும் வரை
நம்மோடு மல்லுக்கட்டும்


முதல் சம்பளம்
கூட்டிடும் மனபலம்


முதல் சம்பளம் சிலருக்கு
முற்றிலும் சாமிக்கு சமர்ப்பனம்


சிந்திய வியர்வை
சம்பளமாய் சிந்தும்

தமிழ்

நாடு ஓர் உணர்வு
உணர்வை உரைக்க
மொழி ஒரு கருவி !!


தமிழ்
கருவிகளில் கரும்பு
கேட்பதால் கிறக்கம்
மொழிவதில் மெல்லிய மயக்கம் !!


தண்ணீர்
அருந்தும் போது ஆனந்தம்
தமிழ்
அறியும் போதே அமிழ்தம் !!


நம்மில் பலர்
ஊர் அறிய
உலகம் தெரிய அதை
தெள்ளென புரிய
வந்தது தமிழால் !!


ஆதலால்
போற்றுவீர் தமிழை !!

அறிஞர் அண்ணா

உன்
செந்நாவில் சிந்திய
சொற்களால் செதுக்கப்பட்ட
சிலைகள் நாங்கள்;


நீ வேர்
உன்னில் இருந்து
கிளம்பிய கிளைகளும்
இலைகளும் ஏராளம்;


உன் விதிப்படி
நடப்பவரே இங்கே
பார் ஆள்வர்;


அண்ணா
என்ற உன் நாமத்தை இந்’நா’
கூறையிலேயே எங்கள் இன்னா
தீர்கிறதே;
உன் கருத்தை
கடைப்பிடித்தால்
என்நாளும் பொன்நாளே !!!

உலக அழகி

நீன்
உன்னை உலக அழகி
என்று என்னிக் கொள்கின்றாய்;
ஏன்
இப்படி விவரமறியா
பிள்ளையாய் இருக்கிறாயோ;

உலகத்தை விட
பெரிய பிரபஞ்சம் இருக்கையில்
உண்மையில் உன்னையே
ஏன் நீன்
சிறுமை படுத்திக்கொள்கிறாய் !!

‘ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
என்கிறார்களே
அப்படித்தானே நீங்களும்’

‘அடிக்கள்ளி………..
ஆசை அறுபது ஜென்மம்
மோகம் முப்பது ஜென்மம்
என்று சொல்லியிருந்தாலும்
நாம் அவற்றை
முறியடித்து முன்னேறுவோம் !! ’

தொலைதூரத்தில் இருக்கும் அவளிடம்
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டான் அவன்
இவன் அவள் பேசி கேட்கவும்
அவள் இவன் பேசி கேட்கவும்
தவமிருக்கிறார்கள்பேசும் பாஷையோ மௌனம்
புரியும் அர்த்தமோ பற்பல


இதயங்களுக்கு இடையே
வார்த்தைகள் வழுக்கிவிழும்


காமுகர்கள்
இதயத்தை இரண்டாக்குவர்
காதலர்கள்
இதயத்தை ஒன்றாக்குவர்

கண்ணாடியில் கால்நொடிகூட நில்லாதவர்கள்
காதல் வந்ததும் கால்வலிக்க நிற்பார்கள்
கண்ணாடியில் தங்களையா காண்கிறார்கள்
தங்கள் காதலரையன்றோ காண்கிறார்கள்

உன்னைப் பார்க்கும் முன்வரை
பெண்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்

உன்னைப் பார்த்த பின்னும்
பெண்களை பார்த்து கொண்டிருக்கிறேன்

உன்னைப் பார்க்கும் முன்வரை
சிறந்த அழகியை தேடிக்கொண்டிருந்தேன்


உன்னைப் பார்த்த பிறகு
உன்னைப் பிறர் தொடுவது மிக அரிது
என்று உணர்ந்தேன் !!

காலையில்

காலையில் எழுந்ததும் எல்லோரும்
இறைவனை தரிசிக்க
கருவறை சென்று தூரத்திலிருந்து
வழிபடுகிறார்கள்

ஆனால் நானோ
காலையில் எழுந்ததும்
உன்னையே கண்டு விடுகிறேன் !!

பூந்தோட்டம்

எப்படி உங்களால் இப்படியெல்லாம்
அழகாக பேசமுடிகிறது என்கிறாய் !

இருக்காதா பின்னே
பூவோடு சேர்ந்த நாறும் மனரும்
அப்படியிருக்கையில்
உன்னோடு சேர்ந்த நான்
பூந்தோட்டத்தோடு சேர்ந்த நான்
மனர மாட்டேனா !!!

தூது

காற்றே ….
காதலி காதில் சொல்லு
காதலன் காத்திருக்கிறான்
அவளுக்கு என்று

நிலமே …..
நிமிர்ந்து சொல்
காதலி நெஞ்சில் புதையும்படி சொல்
காதலன் நெஞ்சமெல்லாம்
அவளே என்று


வானமே ….
குனிந்து சொல்
காதலி வசப்படும்படி சொல்
காதலன் வார்த்தைகளில்
அவளே என்று


நெருப்பே ..
காதலியை நெருங்கி சொல்
காதலன் அணைக்க நினைப்பது
அவளே என்று

பிரிவு

போர்வைக்குள் புகுந்ததுமே
தூக்கம் துரத்த
தான் தூங்கியவன்

காதல் வந்ததும்
தூக்கத்தை துரத்தி
தான்தூங்க தினறுகிறான்

காலையில் விழிக்கையில்
விழிகளில் நீயே
மாலையில் மனதில்
முழுமையாய் நீயே
மதியமும் மறக்காமல்
மனதில் தோன்றுவாய்

மனித மனமே இப்படித்தான்
இருக்கும்போது கூத்தாடாமல்
இல்லாத போது
நினைத்து நெகிழும் !

சந்தேகம்

தனிமையில் இருக்கையில்
பொறுமையாய் இருப்பவள்
பொதுவினில் ஒருத்தி
கை குலுக்கினாள்
பொங்கி எழுவாள்;

தன்விரல் படர்ந்த ஊனை
பிறிதொரு பெண் தொடுவதை
தாங்க மாட்டாள்;

சந்தேகம் வந்தால்
அதைத் தெளியாமல்
தூங்க மாட்டாள் !!

ஆப்பிள்

மறக்காமல் தினமும்
என் கண்ணத்தை கடித்து முத்தமிடுகிறீர்களே
என்மேல் அவ்வளவு அன்பா !
கேட்கிறாள் காதலி

இருக்காதா பின்னே
‘An Apple A Day
Keeps The Doctor Away’
சொன்னான் காதலன் !!

கனவு

கனவுக்கு எல்லை
என்றுமே இல்லை
கைகளை பூட்டலாம்
கனவுகளை அல்ல !

கனவுகள்
வருங்காலத்தின் வாசற்படி
நம்மையும் வெளியையும்
இனைக்கும் பாலம்


கனவில்
காலத்தையும் கடக்கலாம்
காற்றையும் கைப்பிடிக்கலாம் !

வெற்றி தோல்வி

காலமெல்லாம்
வெற்றியே கண்டவர்கள்
காதலில் தோற்பதும்ண்டு

காலமெல்லாம்
தோல்வியே கண்டவர்கள்
கொண்ட காதலால்
வெல்வதுமுண்டு !!

காதலி

கவிதையில் உன்னை
வர்ணிக்க காத்திருக்கையில்
மொழிகள் வார்த்தை வரத்து
இல்லையென்று ஒதுங்கி கொன்டன
மௌனம் முன்வந்து
கை கொடுத்தது..
அமைதி அடுத்து வந்தது !!

ஓவியமாய் வரைந்தாவது
வர்ணிக்க நினைத்தேன்
இயற்கை ஏளனமாய் கூறியது
என்னில்
எதை எடுப்பாய் ?
எதை விடுப்பாய் ?
என்று
வர்ணங்கள் பலதேடி
ஓய்ந்துப்போனேன்


இசையாய் இசைத்து
வர்ணிக்க விழைந்தேன்
இசைக்கருவிகள்
இது
எங்களால் இயலாது
என்று ஒதுங்கின


சிலையாய் செதுக்க
யத்தனித்தேன்
உலோகமும் உளியும்
ஓடி ஒளிந்தன

காற்றும் நதியும்
நாங்கள் இருக்கிறோம்
என்று
நம்பிக்கை தந்தன

மலையும் மடுவும்
காடும் கழனியுமே
கடைசியில் கை கொடுத்தன !!

மண்

மண்னில் உள்ளதே
மரத்தில் உள்ளது

மரத்தில் உள்ளதே
கனியில் உள்ளது

கனியில் உள்ளதே
உன்னில் உள்ளது

மன்னே தாய்
மானிடனோ சேய் !

சாதி

சாதி,
ஆக்கிடும் அது
உன்னைப் பாதியாய் !

சாதி,
உடைத்திடு அதை மோதி
கொள்ளாதே அதை எண்ணமாய்
கொன்றுவிடு அதை தின்னமாய் !

இல்லம்

வீடுகள்
செங்கல்களால் ஆனது

இல்லங்கள்
இனிய உள்ளங்களால் ஆனது !

மனவலி

உரைக்காத வரையில்
உணராது உலகம்

தெரியாத வரையில்
தேம்பாது கண்கள்

அழுகாத வரையில்
அனைக்காது கைகள்

வலியே வெறி
வெறியே வெற்றி

வீரனுக்கு
வெறிதான் வாழ்க்கை
வெற்றிதான் வரலாறு

சொல்பவன் சோர்ந்தவன்
செய்பவனை சார்ந்தவன்
வெல்பவனே வாழ்பவன்

வார்த்தை விழுந்து
உடைந்த மனம்
நேர்த்தி இழந்து
நொறுங்கி போகும்

கடல்

கடல்
சொல்லும் சேதி
கனக்கிலடங்கா

அலைகள் ஆடி ஆர்ப்பரிக்கும்
ஆழம் அடக்கமாய் இருக்கும்

கடல் ஆழத்தில்
உலகத்தின் ஓசைகள்
ஒடுங்கிப் போகும்

அலைகள் அடங்காது
அடிக்கடி வந்து போகும்;
காமமும் அப்படியே

ஆழம் அமைதியாய்
அப்படியே இருக்கும்;
காதலும் அப்படியே

அலைகள் அடங்காது
அலையை விடு
ஆழத்தை அடை
அமைதியை உணர்

ஆசைகள் அடங்காது
ஆசையை விடு
ஆன்மிகம் அடை
அமைதியை உணர்

முதல் உயிர்
பிறந்தது உன்னுள்

பரினாம பின்னனியில்
பின் பிறந்த
பிறப்பே நாங்கள்

நிலாவை கண்டால்
நெறுங்க நினைக்கிறாய்

அலை ஓசை
ஆனந்த இசை

ஆனந்தம்

பொருளை
அடைவதில் இல்லை
அளிப்பதில் உள்ளது

அறிவை
பாதுகாப்பதில் இல்லை
பகிர்வதில் உள்ளது

உழைப்பின்
தூக்கத்தில் இல்லை
நோக்கத்தில் உள்ளது

காதலியை
காண்பதில் இல்லை
காப்பதில் உள்ளது

உணவு

பசித்த பின் புசி
பசியின் அளவே ருசி

உண்ணும் முன்
உழவனை யோசி

உண்ணும் வேளையில்
வீனடிக்காதே பேசி

உண்ட பின்
உறக்கத்தை ஏசி
உழைப்பை நேசி !

பிரயானத்தில்

பின்னோக்கின் மலைத்தொடர்
பார்த்து அதை மலைத்தவன்
ஆனேன்

முன்நோக்கின் மாந்தோப்பு
பார்த்து அதை மகிழ்ந்தவன்
ஆனேன்

பாதையெங்கும் புங்கை மரம்
முற்றங்களில் மூங்கில் கொல்லைகள்
பர்லாங்குக்கு பர்லாங்கு பாலங்கள்
வழியெங்கும் வயல் வெளிகள்

வரிசையாய் வாழைக் கொல்லைகள்
நடப்பட்ட நாற்றாங்கால்

குளத்தில்
குதித்தாடும் கெண்டை
வளைந்தாடும் வாத்து

கண் தொடுகிற இடமெங்கும்
தென்னந் தோப்பு
வான் பார்த்த இடமெங்கும்
வெண் மேகம்
மண் பார்த்த இடமெங்கும்
மயில் கூட்டம்

கரும்பு தோட்டம்
வேலியை சுற்றி
மழலையர் கூட்டம்

வானத்தில் வெண்நாராய்
வரப்பில் வனப்பு மகளிர் !

அறிவழகி

அழகாய் இருப்பவர்
அறிவாய் இருப்பது அரிது

அறிவாய் இருப்பவர்
அழகாய் இருப்பது அரிது

அரிதாய் இருப்பது யாரடி
அன்பே ! அதுநீன் தானடி
அறிந்தேன் அதை இன்றடி

இன்று
நெஞ்சத்தில் நினைத்தேன்
உனையே மனப்பேன்
என்று

மேகம்

வானத்தின் வென் இலை
உதிர்ந்து விழுந்தால் மழை

உதிரும் முன் வயலில் உழை
உதிரம் உருக கழை
உளைப்பினால் விளைச்சல் நிலை

இறைவன்

காட்டு மிரான்டிகளின்
கட்டுக்கடங்கா காட்டாறு

கைக் குழந்தையின்
கட்டுக்கடங்கும் பூப்பந்து

கும்பிட கோவில் செல்கிறோம்
கால் கடுக்க நிற்கிறோம்
உண்மையில்
உள்ளத்தில் உள்ளான்
வெளியில் தேடுகிறோம்

இறைவன்
ஒலிகளற்ற மொழி
ஒளியற்ற வெளிச்சம்
உணர்ச்சிகளற்ற உணர்வு
சிலைகலற்ற சிற்பம்..
சிலைக்குள் சிறைபடுத்தி
சிறுமை செய்யாதீர்
சிலைகள் வந்தது
கலைகள் வளரவே
ஒருவனே உள்ளானெனின்
ஓராயிரம் மதம் எதற்கு

உணர்வு

மன்னித்தல் மனிதத்தன்மை
மன்னித்ததை மறத்தல்
மேன்மையான மோட்சத்தன்மை

தெரிந்ததை தெரிவிப்பவர்
கேட்பவர் காதுவரை செல்வர்

உணர்ந்ததை உரைப்பவர்
கேட்பவர் இதயத்தில் இறங்குவர்

தெரிந்ததை தெரிவிப்பதை விட
அறிந்ததை அறிவிப்பதை விட
உணர்ந்ததை உரை
உணர்வே உண்மை
உண்மையே நன்மை !

ஐம்பூதம்

சுவாசம் சண்டையிட்டு
விட்டு விலகியபின்

நிலத்தில் வைக்கப்பட்டு
நெருப்பில் எரிக்கப்பட்டு
நீரில் கரைக்கப்பட்டு
ஆகாயத்தில் ஆன்மா
அன்னியோன்யம் ஆகிறது !!

இறப்பு

பிறக்கையில் தான்அழுது
பிறரை சிரிக்க வைப்பர்

இறக்கையில் பிறர் அழ
புறப்பட்டு செல்வர்

வாழ்ந்தகாலம் முழுதும் கேள்விக்குறியே
இறந்த பொழுதும் கேள்விக்குறியே

சொர்க்கமா ?
நரகமா ?

வாழ்வு
எதிர்காலத்தின் காற்புள்ளி ,,,,,,,

இறப்பு
எதிர்காலத்தின் முற்றுப்புளி …….

பாட்டி

என் பாட்டி
வளர்த்தால்
என்னை சீராட்டி
பன்பு என்னும் சோறூட்டி
பொன்னி நதியில் குளிப்பாட்டி

தேய்பிறையில் நிலவைக் காட்டாமல்
வளர்பிறையில் மட்டும் நிலவை காட்டி
நம்பிக்கையை நாள்தோறும் ஊட்டி !!

குழந்தை

பத்து மாத பொறுமையின்
பொன் சித்திரம்

கருவிலிருந்து கடவுள்

தான் அழுது தரையிறங்கி
தாயென்ற ஸ்தானத்தையும்
தந்தையென்ற ஸ்தானத்தையும்
பகிர்ந்தளிக்கும் பகவான்

வாயில் மண்
கையில் கல்
கந்தலாய் துணி
விழியில் ஒளி
தாயுடன் அமர்ந்து
தந்தையை நோக்கி


அழுகையும் அழகாய்
சிரிப்பும் சாந்தமாய்
விழியெல்லாம் ஆச்சர்யமாய்


கோவில் கருவறையில்
உயிரில்லா கருங்கல் சிலை

பெண்ணின் கருவரையில்
உயிருள்ள கடவுள் சிலை


வெற்று பாத்திரமாய்
வந்து இறங்கி
வெற்றி பாத்திரமாய்
மாறப் போகும்
நாளைய நம்பிக்கை

குழந்தையை பற்றி
கவிதை எழுதுகையில்
வார்த்தைகள் வந்து விழாமல்
குழருகிறதே ஏன் ?
குழறல்தானே குழந்தை !!

குழந்தை முத்தம் குதூகலம்

கலங்கமில்லா பார்வையில்
கோபமும்
கரைந்து போகும்

கள்ளமில்லா சிரிப்பில்
உள்ளம்
கொள்ளைப் போகும்

தத்தி தத்தி
தவழ்ந்து தவழ்ந்து
தாயை சேர்ந்து
தன்உணவு அருந்தி
கனமே தூங்கும்
குழந்தையே கடவுள் !!

தாய்

தாயானவள் தலையானவள்
உயிரைத் தாங்கி
உலகுக்கு தாரைவார்ப்பவள்

அழகுக்கு அளவுகோல்
அவரவர் அகமே
தாய்க்கோ தன் பிள்ளை !

தாரம் தாங்காத போதும்
தாய் தாங்குவாள் !

தொல்லை கொடுத்தால்தான் குழந்தை
தாங்கி கொள்பவள்தான் தாய் !!

ஊடல்

பொய்க்கோபம் பலவாகினும்
வாய்திறக்கும் உள்ளம்
மெய்கோபம் ஒன்றாயினும்
உள்ளடங்கி போவதேன்

உரசலில் தொடங்கும்
உடலில் முடியும்
உள்ளம் கரையும்

காலையின் சண்டை
கட்டிலில் சமரசம்
காதலர்க்கு கட்டிலே
ஐ.நா சபை

மாலையின் முறுக்கு
மல்லிகையில் மறைந்திடும்

உதயசூரியன் உதித்தபின்
உருவாகும் ஊடல்
ஆதவன் அடைந்தபின்
அப்படியே அடங்கிடும்

தொடங்கையில் கேள்விக்குறியாய் ?????
அடங்கையில் ஆச்சரியக்குறியாய் !!!!!!!!!

தொடங்கையில்
காட்டு கத்தலாய்
கோப சத்தம் .. !!!

அடங்கையில்
உச்ச ஸ்தாபியில்
முத்த சத்தம் …. !!!

கோபத்தில்
முளைத்த வார்த்தைகள்
வட்டியும் முதலுமாய்
கட்டிலில் முத்தமாய் !

கட்டில்

இரண்டு கால் மிருகம்
இளைப்பாற
நான்கு கால் கொண்டு
நிலத்தில் நிற்கும்

நிலத்திற்கும் நமக்குமிடையில்
ஒரு பாலம்
ஒரு நெருடல்

தொடங்கிடும் இங்கே
இரவு நேர வருடல்

உயிரணு

புருஷனுடன் பகிர்ந்து
பலகோடி பெற்று
ஒன்றைப் பொறுக்கி
தன்னுடல் பொறுத்தி
பாரம் பொருத்து
பொறுமை காத்து
பத்து மாதத்தில்
பொக்கிஷம் பெறுவாள் !

நிலா

கதிரவனில்லா வான்வெளியில்
காரிருளில் வெண்விழி
விழி அடைத்தால் அமாவாசை
விழி விரித்தால் பௌர்னமி

தேடல்

உண்மையை
உரக்க உரைப்போம்

பொய்மையை
பூமியில் புதைப்போம்

துன்பத்தை
துரத்தி தொலைப்போம்

இன்பத்தை
இன்றே இயற்றுவோம்

குனிந்து
கட்டாந்தரையை கானாதே

நிமிர்ந்து
நீல வானை நோக்கு

குட்டும்போது குனியாதே
பயமுறுத்தலுக்கு பனியாதே

தேடல் முடிந்ததென்று தனியாதே !

மழை

மழை விசித்திரமானது

பெய்யெனப் பெய்து
வயல்களை விளைச்சலாக்கி
வாய்பிளக்கவும் வைக்கும்

பொய்யெனப் பெய்யாமல்
வயல்களை வறட்சியாக்கி
வாய்மூடவும் வைக்கும்

மழை இனிமையானது

மாலை வேளையில்
மலையில் நின்று
மேகம் பார்த்து
மழையில் நனைதல்
மனதை நிரப்பும் !

மனைவி

மூன்று முடிச்சின்
முதல் அங்கீகாரம்

பிறந்த வீட்டின் உறவு பிறிந்து
புகுந்த வீட்டின் பாரம் பகிர்வாள்

கணவனின் கனவுகளுக்காகவும்
குழந்தைகளின் கல்விக்காகவும்
அவள் ஆசைகளை
முலையிலேயே முறிப்பவள்
ஆதியிலேயே அறுப்பவள்


அவள் துயில் எழுந்தவுடன்
ஆதவன் தான் எழுவான்

அம்புலி தலை அடைந்ததும்
அவள் தான் துயில்வாள்


பிள்ளைகள் பிரியப்பட்ட நேரத்தில்
வயிற்றுப்பசி போக்கி

புருஷன் பிரியப்படும் நேரத்தில்
போர்வைப்பசி போக்கும்

அவள் பிரியம் யாரறிவார்
அவள் மனம் மட்டும் தான் அறியும்

பிறந்த போகையில்
குதித்திடும் கணவர்க்கு
பின்னொரு நாள் புரிந்திடும்
பிரிவின் போராட்டம்

வெறுமை என்பதை
வார்த்தையால் அறிந்தவர்
மனைவி மறைவில்
மனதால் உணர்வர் !

தாயக தாகம்

எண்ணிப் பார்த்து செலவு
செய்ய தூண்டும் வெளிநாடு

எண்ணம் போல் செலவு
செய்யத் தூண்டும் தாய்நாடு

வெளிநாட்டிலே உடல்
தாய்நாட்டில்தான் உள்ளம்

வெளிநாட்டில் உழைப்பு
தாய்நாடுதான் நினைப்பு

வெளிநாட்டில் வசதியாய் வசிக்கலாம்
தாய்நாட்டைப்போல் சுதந்திரமாய் வாழமுடியாது

தாய்நாட்டை
தாங்க வேண்டியதில்லை
தாக்காமலும் தாழ்த்தாமலும்
இருந்தாலே போதும்
வசித்துவிட்டு வந்துவிடுங்கள்
வாழ்வுதந்த சொர்க்கத்திற்கே !


பணம் சேர்ப்பதற்க்காக
பாசத்தை பிரிந்து செல்கிறோம்

பொருள் சேர்ப்பதற்க்காக
பந்தத்தை பிரிந்து செல்கிறோம்

பணமும் பொருளும்
பொறுமையாய் புரட்டியபின்
பிறப்பிடம் புகுந்திடையில்
பெற்ற பிள்ளைகள்
மழலைசொல் மாறியிருக்குமே
அதை
யார் புரட்டித் தருவார்


ஒய்யாரமாக ஊர்வலமாய் உலாவந்த
காலம்மாறி
ஒத்தையிலே ஒர் அறையில் தனிமையில்
வாடவேண்டி வெளிநாடு வந்திருக்கோம்
தாய் தந்தையரை தனிந்திருக்கோம்
பொஞ்சாதி பிள்ளைகளை பிரிஞ்சிருக்கோம்

இக்கரைக்கு அக்கரை பச்சை
என்று நம்பி சென்றோம்
சென்ற பின்னே புரிந்தது
அக்கரைப் புல் சுமையானது
இக்கரைப் புல்லே சுவையானது

அயல்நாட்டை நாடி நாம்சென்றோம்
அயல்நாடு இருகரம் கூப்பி வரவேற்றது

தாய்நாட்டை நாடி நாம்வருகையில்
நம்நாடு இதயம் கூப்பி வறவேற்கும்

உணவு
உள்ளத்தை நிரப்பிய காலம் மாறி
உடலை மட்டுமே நிரப்பும்

உள்ளவர் போய் சேர்ந்தால்
கடைசியாக முகம் பார்க்கமுடியாமல்..
இருப்பவர்க்கு திருமணமென்றால்
அருகிலிருந்து அட்சதை தூவமுடியாமல்
தொலைதூரத்தில் தொலைத்துவிட்ட
துயரத்தையும் சந்தோஷத்தையும்
தொலைக்காட்சியில் தெரிந்து கொள்கின்றோம் !!


01 - தாயக தாகம் | Upload Music

கா(த்)தல்

எல்லாம் நடப்பது போலே நடக்கும்
ஆனால் உலகம் முழுதுமே
நமக்கெதிராய் இருப்பதுபோல் இருக்கும்

ஏக்கமாய்
அவள் கூறும் வார்த்தைகள்
அவனுக்கு கட்டளைகளாகும்

தூக்கத்தில்
அவள் உளறும் வார்த்தைகள்
அவனுக்கு கவிதைகளாகும்

நோக்கத்தோடு
அவள் கூறும் வார்தைகளே
அவனுக்கு எதிர்காலம்


அன்பில் பன்பில்
அழகில் அறிவில்
தன்னிலும் மேலானவரென்று
அவன் அவளையும்
அவள் அவனையும்
எண்ணி மோகம் கொள்வர் !
கண்கள் காணாத
நேரங்களில் சோகம் கொள்வர் !
கோபமென்பது வாராது
வந்தாலோ அவர்
வருந்தா வண்ணம் வேகம் கொள்வர் !

காதலை
சொல்ல காலமாகும்

வந்தவுடனே சொல்ல
காதல் என்ன மின்னலா

அல்ல
காதல் மேகம்
மேகம் உருவாக
நேரம் ஆகும் !

காதலை சொல்லுகையில்
இதயம் இருமடங்காய் இடியிடிக்கும்
காதலை சொன்னபின்
இதயம் அரைமடங்காய் அடங்கிவிடும்

காதல் என்பது காத்தல்
காதலியை நாம் காத்தல்
காதலியை நோக்க நாம் காத்தல்
காதலியிடம் உண்மை காத்தல் !

மழை

அவன் அவளிடம் கேட்டான்
நித்தம் நித்தம் முத்தம் வேண்டாம்
நிதம் ஒரு முறையேனும் .......
முடியவிலையா ..?
மாதம் ஒரு முறையாவது
முத்தம் தர மாட்டாயோ ..?
அவன் நிலம்
அவள் மேகம் !!!

கண்ணாடி

ரசம் குறைந்திருந்தாலும்
நம்மை
ரசிக்க வைக்கும் !!

செல்போன்

புல்லரிக்க வைக்கும் புது இசையில்
தினம்தோறும்....

காவு

கருவறையில் உருவாகும் போதே
ருசுவாகி விடுகிறது சாவு

ஒருவர்
அதை நிர்ணயித்தால்
காவு !

சொல்

எண்ணங்களின் வண்ணம் மாறலாம்
எண்ணங்களின் சாரம் மாறாமல்
சொற்களை சுருக்கி
சுருக்-கென புரியும் படி
சொல்வதே சொல் !

பேனா

கை நீளத்தை விட
நீண்டு இருக்கும்
முக்கிய விரல்

கல்லூரி சாலை

மழை பெய்த அந்த மாலைபோழுதிலே
தரை நனைந்த அந்த தார் ரோட்டிலே
ஒற்றையிலே ஓர் ஊர்தியிலே போகையிலே
அடிமனதில் ஓர் ஏக்கம் பொங்கும்
இச்சாலை முடிவில சாலையாய் மாறாதோ !!!

ஆசிரியர்

ஆசிரியர் ஆகுபவர்
உன்னையும் என்னையும்
ஆள் ஆக்குபவர் ..

ஆசிரியர்
ஏணிப்படிகள் மட்டுமல்ல
உன் வெற்றியை கண்டும் கேட்டும்
மகிழ ஏங்கும் படிகளும் கூட.....

ஆசிரியரின் ஆசியை யாசி
நிஜமாய் அவரை நேசி ..

போதை

'மது'தேன் புசித்தான்
மதியை இழந்தான்

காலையில் எழுந்தான்
மதுவை மறந்தேன் என
மனையாளிடம் மண்டி இட்டான்


மாலையில் மனையாளையே மறந்தான் ..
'மது'தேன் புசித்தான் ..!!

இளைஞர்

வள்ளுவர் வாக்கு
விவேகனந்தர் வாய்மொழி
காந்தியின் கருத்துக்கள்
கலாமின் கனவுகள்
என அனைத்தும்
கலந்த கலவையாய்
இளைஞா இன்றே வேண்டும்
நீன் இந்தியாவுக்கு ..
இளைஞா
இந்தியாவை சிந்தியாமல்
இருந்து விடாதே ..

மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம்
மனதில் அன்பால் உருவாவது
தலையில் பிறையாலும்
நெற்றியில் திருநீராலும்
கழுத்தில் சிலுவையாலும்
அல்ல .. !!

படைத்த ப்ரம்மாவானாலும் சரி
காக்கின்ற கிருஷ்ணாவானாலும் சரி
மாய்க்கும் மகேஸ்வரனானாலும் சரி
இரட்சிக்கும் இயேசுவானாலும் சரி

மதிக்கு சரியெனப்படுவதை மாற்றலாம்
இதயத்திற்கு சரியெனப்படுவதை மாற்ற ஏலுமோ !!

காதல்

'காதல்' என்ற வார்த்தையில்a
ஒரு
'த்திருத்' தம் செய்தால்
'காதல்' 'காத்திருத்தல்' ஆகும்
காத்திருத்தலும் ஒரு சுகானுபவமே !!

கண்கள்

கண்ணே ! உன் கண்களில்
நயாகராவின் ஆழம் அமிழ்ந்துவிடும்
நைல் நதியின் நீளம் நொறுங்கிவிடும்
கங்கை கரையும் கரைந்துவிடும் ...

ஒ..
நீன் காவிரியோ ..
காதலனாய் நானோ
ஆகையால் கண்களில்
கண்ணீரை காணவில்லையோ !!

நிலம்

நிலம் நம்மை தாங்கும்
நம்மை தாக்குகிரவரையும் தாங்கும்

நிலம் நமக்கு கீழே இருக்கலாம்
ஆனாலும் நம்மிலும் மேலானது

நிலம் நீர்ப் பாத்திரம்
நிலம் உயிர்களின் உறைவிடம்

நிலம் நீள அகலமே உலகம்
உலகம் உள்ளவரையில்
உயிர் இல்லாமல் போனாலும்
நிலம் இல்லாமல் போகாது

பிறப்பிடம்

பிறந்த ஊர் பெருமை
பிரிந்த பின்னும் பின் தொடரும்

புகுந்த ஊர் பெருமை
புகுவதற்கு முன்வரை மட்டுமே

சொந்த ஊரின் சுதந்திரம்
புகுந்த ஊரில் காசுக்கு கிடைக்கும்

கோரைப்பாய் சுகம்மாறி
பட்டுமெத்தை பாடு படுத்தும் ..

பிறப்பிடம் நம்மை தேர்ந்தெடுத்தது
புக்கிடத்தை நாம் தேர்ந்தெடுத்தோம்

நம்மை தேர்ந்து எடுத்ததிடம் தான்
பாசத்தையும் பந்தத்தையும் பார்க்கலாம் ..

மனைவியின் ஆசிரியன்

காதலை சொல்லி
கல்யாணத்திற்காக காத்திருப்பவன்
காதலிக்கு மாணவன்

காதலை சொல்ல
கல்யாணத்திற்கு காத்திருப்பவன்
மனைவிக்கு ஆசிரியன் ....

தாய்

தாய்க்கு தனையன்
தலைவனே ஆனாலும் குழந்தையே
பைத்தியமே ஆனாலும் புத்திசாலியே !

புத்திரர் பிறக்கும் முன்
புருஷனுக்கு முன்னிலை தந்தவள்
புத்திரர் பிறந்த பின்
புருஷனையே புறந்தள்ளுவாள் !!

மேகம்

வான் குழந்தை
தவழ்ந்து வந்து
தரை சேர்கையில்
கரைந்து போகிறாள் ..!!

மழை

உருண்டு திரண்டு
உருளை வடிவில்
உயிர்த் துளி ..

தவித்த வாய்க்கு
துயரத்தை தணிக்கும்
தண்ணீர் துளி ..

வானில் வருணன்
உளியால் செதுக்கி
சிதறடித்த சிதறல் ...


மழைத்துளி மங்கை
புகுந்த இடத்தில்
பெருமை சேர்ப்பாள் ..!
 
Wordpress theme designed by antisocialmediallc.com