தோளுண்டு தாள் தாங்க - ஆமாம் அப்படித்தான்!

அள்ளி அள்ளிக் கொடுத்த
வெள்ளியை கிள்ளவில்லை
தள்ளி நில் நீ என்று
டெல்லியில் இடம் ஒன்று கண்டு
எடைக்கு எடை தந்த
தங்கத்தை தொடவில்லை
அங்கத்தில் அணிந்தாரும் இல்லை
பாங்காய் கட்டிய கட்டடமே உண்டு!

வரித்துறை விதித்த பொய் வரியை
வரிக்கு வரி மறுத்து
உரிமைப் போர் புரிந்து
பெரியாரின் பொருளை
வட்டியும் முதலுமாய்
போராடிப் பெற்றதுண்டு!

கத்தி - மருத்துவ அறிவால்
இதயத்தை தொட்டது மும்முறை
சுத்தி-அரிவாள் - குழம்பிய அறிவால்
இதயத்தை தாக்கியது எம்முறை?

உலையில் போட்டு 
வெந்தால் சோறு
வந்தால் வரவு...
ஆம்,
இல் நீங்கி இல் வந்தால்
இல்லத்திற்கு வரவு
இல்லையேல்
இனத்திற்கு வரவு!

கொடும் சொல்லால் ஏசுவோர் உண்டு
கடும் சொற்கள்
வீசுவோர் உண்டு
கருத்தாவை விடு
கருத்தாக்கம் தொடு என;
நோயை விடு
நோய் முதல் நாடச் செய்து
ஆரியம் உருவாக்கும் மாயையை
கூரிய கருத்தால் ஓடச்செய்து
சீரிய பாடம் எடுக்கும் ஆசிரியர்!

தேர்க்காலும் புரவிக்காலும் தாங்குவது இழிவு
பழி நீங்க
தோளுண்டு தாள் தாங்க
பொதுநல வெற்றிக்காக..
சுயநல சுனாமி நாங்கள்
ஆமாம் அப்படித்தான்!

- ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து,
லண்டன்

அவள் அவளாய் இருக்கிறாளா?

நான்,
நானாய் இருப்பது
அவளிடம் மட்டும்;

மிருகமாய் பல நேரம்
மிருதுவாய் சில நேரம்!

அவள்,
அவளைத் தொலைக்கிறாள்;
நான்,
அதைப் பார்க்கிறேன்;
அவள் கண்களில்,
நாணத்தை பார்க்கிறேன்;


அவள்,
'அவளை' தொலைத்து
என் 'நானை' காப்பாற்றுகிறாள்!


ஆனாலும்,
அவள் அவளாய் இருக்கிறாளா?


- பொன்னியின் செல்வன் -

பிரிந்த காதல்

எந்தை இறந்தது ஈழத்தில்;
நுந்தை இறந்தது ஈழத்தில்;
நம் காதல் பிரிந்தது  ஈழத்தில்!


இப்போதும்
தினமும் உன்னை
நினைத்து கொள்கிறேன்;


கனடாவில் இருந்து கொண்டு
ஜெர்மனியில் இருக்கும் உன்னை !

துப்பு கெட்ட அரசியல் வாதி

வாய்ப்பை விட்டு விட்டு
இப்போது வாலை துழாவவும்
யாரும் இன்றி !

ஈழ அமைதிக்கு
வாய்ப்புகள் வாய்த்தபோது
வாக்குகளை மட்டும் பார்த்துவிட்டு
வஞ்சித்து விட்டார்கள் !

அடுத்த தேர்தலில்
வால் நுனியை
மீண்டும் பிடித்து விடுவார்கள்
துப்பு கெட்ட அரசியல் வாதிகள் !

மரியாதை நிமித்தமோ

புத்தமும் யுத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.

சத்தமும் ரத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.

ராவனனுக்கும் ராஜபக்ஷேக்கும்
இடம் ?
லங்கா.

பிறகு ஏன்
பெயர் மட்டும்
ஸ்ரீ லங்கா ?
மரியாதை நிமித்தமோ !!
 
Wordpress theme designed by antisocialmediallc.com