ஒரு கூட்டம்
கூடி நின்று
கேலி பேசி
கை கொட்டும்

காட்டு
கோழையல்ல நீ
காளை என்று

தவறுகள் பலதோன்றும்
தினம் தோறும்
வருந்திக்கொள் 
திருத்திக்கொள்

தூற்றிய மனிதர்
போற்றும் மனம்பெற
உன்நாள் ஒருநாள் வருமென்று 
உனையே வருத்திக்கொள்

உழைத்து இளைத்தல்
உடலுக்கு களிப்பே

உழைத்து உழைத்து
உலகுக்கு காட்டு
நீயோர் எடுத்துக்காட்டு

அஞ்சற்க
நெஞ்சம் நிமிர்
நாளும்
கேள்விகள் பல கேள்

விடை தெரியா
வினாவே சிறந்தது
வாழ்க்கை சக்கரம்
உருள்வது வினாவாலே

ஓய்வு?
ஒரு வேளை
வேலைக்கு கொடு
உனக்கல்ல

நல்லெண்ணம் தினம் கொண்டு
உழைக்கும் வர்க்கமாய்
உனை மாற்று
உள்ளத்தை உருவேற்று

சொற்களைக் குறை
செயலே உன் கரு

உறங்க மறு
உழைப்பில் நீ ஒரு எரு

சொல்லாய் அல்லாமல்
செயலால் சொல்

அடங்கு
எழுச்சியுற

தொடங்கு
சிகரம்தொட

உன்னுள் இருக்கும்
ஆக்கமும் ஊக்கமும்
உலகுக்கு ஓர்நாள்
உரக்கவே உரைக்கும்

அன்று
மாலைகள் பலவிழும்
நீ செல்லும்
சாலைகள் தோறும்

உலகம் ஏசும்
பழி பேசும்
உண்மையாய் உழைத்தால்
பாரும் ஒருநாள்
சாமரம் வீசும்

- ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து,
லண்டன்

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com